HAPPY CHRISTMAS!

Tuesday, July 7, 2009

கிழக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகளின் சாத்வீக அமர்வு-‍‍‍ நாளாந்த அறிக்கை 07.07.2009


கிழக்குமாகாணத்தில் 2004-2008 வரையான காலப்பகுதியில் வெளிவாரியாகவும் உள்வாரியாகவும் பட்டப்படிப்பை முடித்து இதுவரை நியமனம் கிடைக்கப்பெறாது வேலைவாய்ப்பு என்ற விடயம் கனவாகிப்போயுள்ள நிலையில் உள்ள கிழக்குமாகாண பட்டதாரிகள் நியமனம்கோரி தாம் இதற்கு முன்னர் பல தடவைகள் நடத்திய கவனயீர்ப்புப்போராட்டங்களெவையும் பலனளிக்காத நிலையில் தற்போது கடந்த ஒருவாரகாலமாக (அதாவது கடந்த புதன்கிழமை 01.07.2009 தொடக்கம்) நியமனம்பெறும் வரையிலான தமது சாத்வீகப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றனர்.

கிழக்குமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் ஜெயராஜ் கருத்துக்கூறுகையில், ”இந்த சாத்வீகப்போராட்டமே நியமனம் கோரும் எமது இறுதிப்போராட்டமாக இருக்கும். ஏனெனில் இந்த சாத்வீக அமர்வானது எமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்காதவரையில் இடைநிறுத்தப்படப்போவதில்லை என்ற ஒருமித்த கருத்து எமது சங்க உறுப்பினர்கள் மத்தியில் உறுதியான நிலையில் உள்ளது” என்றார். அவர் தொடர்ந்து கூறுகையில் எமது போராட்டமானது வெளிக்கொணரப்படுவதில் ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. பத்திரிகைகள் பலவும் அன்றாடம் எமது சாத்வீக அமர்வு குறித்த செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அந்த ஊடகங்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இவ்வாறு பல ஊடகங்கள் எமது போராட்டத்துக்கு முன்னுரிமை வழங்கி செய்திகளை வெளியிடுகின்ற போதிலும் குறிப்பிட்ட ஒருசில தமிழ் இலத்திரனியல் ஊடகங்களின் பாராமுகம் வேதனைக்குரியதாக உள்ளது என்றார்.

இப்போரட்டத்தின் முன்னேற்றம் குறித்துக் கருத்துரைத்த ஜெயராஜ் அவர்கள்,

1.கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி(UNP) உறுப்பினர்களான மாசிலாமணி, சசிதரன் போன்றோர் எமது சாத்வீகப்போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வருகை தந்து எமது சங்க உறுப்பினர்களுக்கு ஆறுதல்மொழிகளையும் தெரிவித்துச்சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் எமது போராட்டம் நியாயமானது என்பதை ஏற்றுக்கொண்டதோடு, 21.07.2009 அன்று இடம்பெறவுள்ள மாகாணசபை அமர்வின்போது இவ்விடயம் தொடர்பாகத்தாம் மாகாணசபையிலே எடுத்துக்கூறி வலியுறுத்தவுள்ளதாகவும் வாக்குறுதியளித்துள்ளனர். மேலும் இப்போராட்டத்திலே ஈடுபட்டுள்ள பெண்களின் பரிதாப‌நிலை தொடர்பாகக் கவனஞ்செலுத்திய எதிர்க்கட்சி உறுப்பினர் சசிதரன் அவர்கள் எமது சாத்வீகப்போராட்டம் நடைபெறும் இடத்திலே லைற்(light) வசதியை ஏற்படுத்தித்தருவதற்கான ஏற்பாட்டையும் செய்துதவினார்.

2.(ஈ.பி.ஆர். எல்.எப்)கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் அவர்களும் எமது போராட்டம் நடைபெறும் இடத்துக்கு விஜயம் செய்து எமக்கு நம்பிக்கயூட்டக்கூடிய விதத்தில் ஆறுதல் வார்த்தைகளை கூறிச்சென்றார். எம்முடன் உரையாடிய மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் அவர்கள் எமது கோரிக்கை நியாயமானது என்பதை ஏற்றுக்கொண்டதோடு, இதுவரை பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக மாகாணசபையிடமோ மத்திய அரசிடமோ எவ்வித ஏற்பாடுகளுமில்லை எனத்தெரிவித்தார்.இதுதொடர்பாக தான் தனிப்பட்டரீதியாகவும் கட்சிரீதியாகவும் மாகாணசபைக்கு அழுத்தம் கொடுப்பதோடு இவ்விடயத்தை மத்திய அரசுக்கு எடுத்துச்செல்வதற்கும் ஆவன செய்வதாக வாக்குறுதியளித்தார். பட்டதாரிகள் விடயத்தில் காலாகாலமாக இத்தகைய இழுத்தடிப்பே இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்விடயத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்திலே ஒரு விசேட நடைமுறையைக்கொண்டுவந்து நியமனம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

3.கிழக்குமாகாண முதலமைச்சர் சனிக்கிழமை இரவு எம்மை நேரடியாக வந்து சந்தித்தார். எம்மோடு உரையாடிய முதலமைச்சர்
”கிழக்கு மாகாணசபையால் தற்போதைக்கு நியமனம் எதுவும் வழங்கக் கூடிய நிலை இல்லை. மாகாணசபையின் அனைத்து உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்து மத்திய அரசினூடாக, தற்போதைக்கு நியமனம் வழங்கக் கூடிய நிலையிலுள்ள விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர், கொலனி உத்தியோகத்தர்களுக்கான சுமார் 350 வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கையெடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

4. 6 வது நாள் திங்கட்கிழமை அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சுஜித(சுஜித்) எம்மை வந்து சந்தித்தார். எமது போராட்டத்துக்கு இயலுமானவரையில் தமது சங்கம் உதவும் என அவர் தெரிவித்ததோடு செய்தியாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்து எமது போராட்டத்தின்பாலான கவன அதிகரிப்பை ஈர்க்க முயற்சி செய்வதாக அவர் வாக்குறுதியளித்ததாகவும் , எமது போராட்டத்துக்கு பொதுமக்களும் வர்த்தக சங்கத்தினரும் ஏனையோரும் கொடுத்துவரும் ஆதரவு பாராட்டத்தக்கது என்றும் அவர்களுக்கு நாம் மிகவும் நன்றியுடையவர்களாக உள்ளோம் எனவும் கூறினார். எமது போராட்டம் தற்போது பலமடைய ஆரம்பித்துள்ளது அனைத்துப்பட்டதாரிகளும் போராட்டத்தில் இணைந்து வருகின்றனர் இப்போராட்டத்தில் பட்டதாரிகளின் பெற்றோர்களையும் இணைத்துக்கொள்வது தொடர்பாகவும் கவனஞ்செலுத்துகிறோம் என்றார்.


-செயலாளர்

கி. மா. ப. ஒன்றியம்